Thursday, August 29, 2013

நினைவுகளின் பயணங்கள்


உன்னாலே தானே முதல்முறை துளிர்த்தேன்.. 
 
உனக்காகத் தானே உயிர் எல்லாம் பூத்தேன்.. 
 
உன் சுவாசம் சேர்க்க காற்றெல்லாம் அளைந்தேன்.. 
 
உன் நேசம் தேடியே உலகையே துளைத்தேன்.. 
 
உன் ஒளி தீண்டியே என்னையே உணர்ந்தேன்.. 
 
அடிவேரில் வெந்நீரும் 
 
     இதயத்தின் கண்ணீரும் 
 
           தந்தாயே முதன்முறை!!!.. 
 
என்றாலும் ஜீவனுள்
 
          உன் நிமிடங்களின் தடயங்கள்!!!..

Saturday, June 8, 2013

எனக்கான சூரியன்


சூரியன்  முகம் பார்த்தே தாமரை மலருமாம்..

நீ நம்பவில்லையா?

ஒருநாள் சிரித்துக்கொண்டே என் முகம் பார்

நிச்சயம் நம்புவாய் :)..
 
எனக்கான ஆதாரம் நீயேதான்  என்று..

Monday, February 18, 2013

அன்புச் சிறை

சின்ன சிரிப்பில்
   சிக்கிய சிந்தையும் 
ஒற்றை பார்வையில்
   வீழ்ந்த கண்களும் 
கனிந்த பேச்சில்
   கவிழ்ந்த இதயமும் 
மீண்டு வரவே
   விரும்ப வில்லையாம்...


உன் கேசம் கோதி

சிறைபட துடிக்கும் 

என் விரல்கள் போல!!!

Tuesday, September 13, 2011

உன் பார்வையில்

உன் உதடுகள் அசைவதைக் கொண்டே 
நீ என்னிடம் பேசுவதை உணர்கிறது 
உன் விழிகள் தீண்டிய கணமே 
நின்று போன என் உலகு.. 

Thursday, June 9, 2011

தொலைந்து போ அன்பே

பார்வைகள் தீண்டா தொலைவிலும்
       நீ நினைவுகளால் சுடுவதென்ன!!
வெளியில் துரத்தி வழிமறித்தாலும்
       உயிரில் பூக்கும் மாயமென்ன!!
கனவில்
    கவிதையில் தொலைந்த பிறகும்
        நீயென் முழுமையாய் நிறைவதேன்ன!!

Thursday, September 16, 2010

21 ம் நூற்றாண்டு



மனமும் உடலும் ஒருசேர சோரும் 
21 ம் நூற்றாண்டு
கணினியும் phone ம் வலைவீசி ஈர்க்கும் 
இயந்திர நூற்றாண்டு
மரங்களும் மனிதமும் காட்சிப் பொருளாய் 
மாறிய நூற்றாண்டு
மழலையின் மனமும் பூமியின் தேகமும் 
நோயுறும் நூற்றாண்டு
அழிவுகள் அறிந்தும் முடிவை நோக்கி 
விரையும் நூற்றாண்டு
நம்புவோம் மீண்டும் இறுதிக்கு இன்னும் 
இடைவெளி உண்டென்று.

Wednesday, August 4, 2010

பொன்னாலான கடவுள் சிலை - கடவுளின் பார்வையில் ஒரு குழந்தையின் கையில்

மலர்களின் மணத்திலும்
சுடுகிற தணலிலும்
இயற்கையின் ரிதத்திலும் 
என்னை உணர்கிறான் ஞானி

தன்னுடைய வெற்றியிலும்
ஒவ்வொரு முயற்சியிலும்
அழகிய கோவிலிலும்
என்னை நினைக்கிறான் மனிதன்
 
நான் பெற்ற வேண்டல்களில்
அழகான உன் வேண்டல்
உன் இல்லம் நான் சேர
வழி காட்டி எனை சேர்த்தது

என்றென்று தந்தை
எங்கெங்கு சென்றாலும்
உனக்காக கொண்டுவரும்
அழகான பொம்மைகளுள்
இன்றுந்தன் ஆட்சியின்கீழ்
அடிமை பொம்மையாய் நான்

உன் யானையோடும் புலியோடும்
         பார்பியோடும் சாலியோடும்
         சேர்ந்தென்னைக் குளிப்பாட்டி
         பவுடர் போட்டு
         நகை பூட்டி
உன் நடைவண்டி தேரில்
நீ  நகர்வலம் தள்ளிச்சென்றால்
முறையான நோன்பிருந்து
குடம்குடமாய் நெய்கொணர்ந்து
ஆலயத்தில் செய்யப்பெறும்
அர்ச்சனையும் வீணாகும்
பிரம்மச்சரியம் கடைபிடித்து
ஐம்புலனும் அடக்கிவைத்து
தன்னுடலை திரியாக்கும்
தவங்களும் பயனரும்

உணவு உண்ணும் மேசை மீது
நீ என்னை அமர வைத்து
அதட்டி உருட்டி என்னை
உணவருந்த சொல்லும் போது
குறைகளை கேட்டு கேட்டு
குறைபட்ட எந்தன் நெஞ்சம்
குறைவின்றி நிறைந்து போகும் -உன்
குறைவிலா அன்பில் நெகிழும்

இறைஞ்சவே தெரியாத அதிகார தொனியோடு
விளையாட வாவென்று என்னைநீ அழைத்தாலும்
பொம்மை வீடுகட்டி குடியேற பணித்தாலும்
குட்டிகுட்டி மண்ணுருண்டை உணவாக கொடுத்தாலும்
உன் கையில் பொம்மை வாழ்வே
என் வாழ்வின் உயர்ந்த நிலை

பிறைசூடி நடமாடும் முக்கண் பித்தனாய்
மலைமீது வேலோடு தமிழ்கூறும் ஆண்டியாய்
பருத்த உடலோடு யானை முகத்தனாய்
கோகுலத்தில் குழலோடு கார்மேக வண்ணனாய்
போதி மரத்தடியில் ஏதுமற்ற ஒருவனாய்
கையில் குழந்தையுடன் கனிவான அன்னையாய்
அரச உடையில் குழந்தை இறைவனாய்
வெவ்வேறு வடிவத்தில் வெவ்வேறு தனிமத்தில்
கலையாக வடித்து காசுக்காய் விற்றாலும்
உன்னளவில் உன்கையில் பொம்மையாய் வாழ்வதில்
தயக்கமோ கலக்கமோ ஒதுக்கமோ எனக்கில்லை
இதனை காட்டிலும் இன்பங்கள் வேறில்லை.