Sunday, February 21, 2010

பொன்னாலான கடவுள் சிலை - குழந்தையின் பார்வையில்

வணக்கம்
கவிஞர்களும் அறிஞர்களும்
பெரியோரும் நண்பர்களும்
நிறைந்திருக்கும் சபைமுன்னே
சின்னதொரு பனித்துளியாய் - தமிழ்க்கடல்
சேர்ந்துவிட துடிக்கின்றேன்
குழந்தையின்  கிறுக்குப்பக்தியை
கடவுள் வெறுப்பதில்லை
நானிங்கு குழந்தைதான்
சிகரத்தில் நிற்கும் நீங்கள்
என் பிழைகளை பொருத்திடுவீர்



பொன்னாலான கடவுள் சிலை - ஒரு குழந்தையின் பார்வையில்

நான் விளையாட போன நேரம்
நீ வீட்டினுள் நுழைந்து விட்டாய்
கண்ணில் குறும்பும் முகத்தில் கள்ளமும்
இதழில் புன்னகையுமாய் பார்த்தபடி நின்றிருந்தாய்
உனை யாரென்று கேட்டதற்கு
எத்தனை பதில்கள்
நீ
விலையுயர்ந்த சிற்பமாம்
சக்திநிறை இறைவனாம்
கேட்டதெல்லாம் கொடுப்பவனாம்
தீயோரை தண்டிப்பாயாம்
விளையாடவும் வருவாயாம்
யார் என்ன சொன்னாலும்
நான் கண்ட உண்மை
நீ எனக்கு எதிரிதான்

நீ வீட்டுக்குள் வந்த பின்னே
அம்மாவின் கையால் நீராட்டல் உனக்கு
சுடச்சுட உணவின் முதல்பந்தி உனக்கு
வீட்டிலே அழகான அலமாரி உனக்கு
தினமும் புதிதாய் பூக்கள் உனக்கு
தினுசு தினுசாய் பட்டாடை உனக்கு
அவ்வப்போது பலவகை பலகாரம் உனக்கு
புதிதாய் வாங்கியதெல்லாம் முதலில் உனக்கு
அதனால் யார் என்ன சொன்னாலும்
எனக்கு நீ எதிரிதான்

உனை எடுத்து ஆற்றில்
தொலைத்து விட முடிவெடுத்தேன்
எடுத்தவுடன் அப்பா எப்படியோ கண்டுவிட்டார்
அழுந்த அறைபட்டு அப்படியே அடங்கிவிட்டேன்
அம்மாவின் மடியில் அடைக்கலம் புகுந்துகொண்டேன்
நான்அழுதழுது ஓய்ந்தபின்னே
அமைதியாய் அம்மா சொன்னாள்
நீ விட்டொழிக்க நினைத்தது
உனைபிடித்த தொல்லையல்ல
உன் இன்னொரு தாய்
உன் இன்னொரு தந்தை
உன் உயிர்காக்கும் தோழன்
எதை கேட்க நினைத்தாலும்
தயங்காமல் அவனிடம் கேள்
எதை செய்ய  நினைத்தாலும்
அவனிடத்தில் கலந்து பேசு
புன்னகையில் விடை கிடைத்தால்
சளைக்காமல் நினைத்ததை செய்
மறுப்பாக விடை கிடைத்தால்
தவறென்று தெரிந்து கொள்
தவறொன்றும் செய்யாதே -தவறினால்
சாமி கண்ணைக் குத்தும்

இத்தனையும் கேட்ட பின்னர் - உன்மேல்
வெறுப்பில்லை எனக்கு
காலையில் நன்னீரில் குளிப்பாட்டி துடைப்பது
நெய்யூற்றி சாதத்தில் பிசைந்துனக்கு ஊட்டுவது
மாலையில் உனக்கு வகுப்புகள் எடுப்பது
தனியாக உன்னுடன் நிறைய விளையாட்டு
என்றெந்தன் கோபம் திசைமாறிப் போனாலும்
தப்பு செஞ்சா அடிப்பியோன்னு
பயம் நெஞ்சில் இருக்குதடா!!!

என் பள்ளிக்கூடம் பக்கத்துல
        அநாதை இல்லமொன்னு
அப்பா அம்மா இல்லாத
       குழந்தைகளை சேர்க்கிறதாம்
ஒரு அப்பா அம்மா இல்லையின்னா
பேனாபென்சில் வாங்கித் தர
பள்ளிகூட பணம் கட்ட
இனிப்புக்காரம் வாங்கித் தர
புதியசொக்காய் போட்டு விட
நீ தானே அப்பா அம்மா
என் அம்மாகூட சொன்னாளே
ஒரு அப்பா அம்மா இல்லையின்னா
நீ தானே அப்பா அம்மா
என் தோழியும் அங்கே இருக்கா
பத்திரமா பாத்துக்கோ

அச்சமில்லை அச்சமில்லை மேடையில முழங்கிவிட்டு
வீட்டுக்கு இருட்டிலே வருகின்ற வழியிலே
உன்பேரை சொன்னபடி ஓடோடி வந்தது
நமக்குள்ளே இருக்கட்டும் யாருக்கும் சொல்லாதே
நாளைக்கு சாப்பாட்டில் என்பங்கும் சேர்த்துதரேன்

இன்னைக்கு எங்க டீச்சர்
நாங்க விளையாடும் நேரத்துல
நீ எங்களை நேசிப்பதாய்
உள்ளம் உருகி சொன்னார்
நாங்கள் கேட்டால் இல்லையென்று - நீ
சொல்லவே மாட்டாய் என்றார்
நீ முக்கண்ணன் என்றாலும்
   நரசிம்மன் என்றாலும்
   யானைமுகன் என்றாலும்
   தச்சன்மகன் என்றாலும்
அவை குழிகுவி ஆடியின்
பிம்பங்கள் போல் தானாம்
உன் ஆதியும் அந்தமும்
மூலமும் ஒன்றேவாம்
ஆகையால் உன்னிடத்தில்
போரில்லா உலகும்
நோயில்லா வாழ்வும்
நல்ல எண்ணமும்
தெளிந்த மனமும்
கேட்டுப் பெறச் சொன்னார்
நீ தராவிட்டால் அடுத்த ஆண்டும்
நான் இதேவகுப்பில் அமர நேரும்
தந்து விடு எனக்காக - அப்படியே
என் தொலைந்து போன பென்சிலையும்

நன்றி

7 comments:

  1. so cute poem... a different view for this topic.. last line rocks.. :):)cute pic too.. :):)

    ReplyDelete
  2. adipavi oru pencil tholangidchunu ivlo feel panruka. enta kaetrukalam la :P super dear.. kalakurae keep writing

    ReplyDelete
  3. அச்சமில்லை அச்சமில்லை மேடையில முழங்கிவிட்டு
    வீட்டுக்கு இருட்டிலே வருகின்ற வழியிலே
    உன்பேரை சொன்னபடி ஓடோடி வந்தது
    நமக்குள்ளே இருக்கட்டும் யாருக்கும் சொல்லாதே

    ayyo, kadavulukum unakum iruntha matter enaku therinchiduchu.......
    epadi ipadiyellam, kalakura po........
    so nice..... too good......
    keep it up......
    by Jeeva....

    ReplyDelete
  4. oooh my God..so beautiful...pls continue..luv it..

    ReplyDelete
  5. Ohh my favourite!!!!!
    great!!!!
    "mutthana padaipu!!!!!
    othukren "unaku kavithanu per vachathu thappilai nu!!!!!

    ReplyDelete