Tuesday, March 31, 2009

எனது முதல் கவிதை என் தமிழுக்காக

என் தமிழ்

ஆதிபகவன் உண்டானது முதல்
ஆறறிவுயிர்கள் வாழும் வரை
முக்காலமும் வினைத்தொகையாய் உன் பிரசன்னம்

விருந்து உணவு படைப்பதில் இருந்து
கற்பு காமம் என்பது வரை
இலக்கணம் வகுத்தே வாழ்ந்தோம் நாம்
அறிவியல் இன்று சொல்வதில் எல்லாம்
அன்றே சிறந்த வல்லுநர் நாம்

வள்ளுவன் ஈரடி தோட்டாக்களாலும் ,
அவ்வையின் நாலடி சூடுகளாலும்,
கம்பன் கவிகளின் குட்டுகளாலும்,
காளமேகனின் இடி மழையாலும்,
பாரதி கவிதையின் புதுமைகளாலும்,
தமிழ்ப்பால் ஊட்டி வளர்க்கப் பெற்றோம்

என் தமிழே,
ஐந்நிலமும் ஐம்புலனாய்
ஐங்காப்பியம் அணிகலனாய்
கற்பென்று சொன்னால் அருந்ததியாய்
அநீதி நடக்கையில் கண்ணகியாய்
இழிவொன்று நேர்ந்தால் அவ்வையாய்
போரென்று வருகையில் வீரநாச்சியாய்
நீ ஒவ்வொரு அவதாரம் எடுக்கையிலும்
உன் காதலன் போலுன்னை ரசிக்கிறேன்

நீ,
இயல்பான காதலனாய்
இசையான காதலியாய்
நாடகக் குழந்தையாய்
முக்கனியின் தீஞ்சுவையாய்
மூப்பர்களின் அருமருந்தாய்
என்னை உரமூட்டி
உன்னை வளமாக்கினாய்

அருசுவை விருந்தை விடவும்
உன்
முப்பாலில் நிறைவு கொண்டேன்

உன்னை நான் பெண்ணாக சித்தரித்தால்
எதுகை உந்தன் எழில்கொஞ்சும் விழிகளோ
மோனை உன் மோகன புன்னகையோ
நீ பிள்ளைத்தமிழ் எங்கே கற்றாய்
உன் கன்னித்தமிழை விடவும் இனிக்கிறதே
உன் வன்தமிழுக்கு அஞ்சாதோர் இல்லை
உன் மேன்தமிழுக்கு மயங்காதோர் இல்லை
ஆனால்,
பொருள்கோள் என்று வந்தால்....
ஒரு
ஒப்பில்லாத
பேரழகியாய்
கொள்ளவா!!!!!!!!

ஆனால் தமிழே,
நீ அகிம்சைக்கு பகைவன்
அழகான ராட்சசி
என்னுள் அடாவடியாய் குடியேறி விட்டாய்
என்னுள் தமிழ் இரத்தம் ஊற வைத்தாய்
என் நாடி நரம்பை உனக்காக துடிக்க வைத்தாய்
என்னை பித்தனாக்கினாய்! தீவிரவாதியாக்கினாய்
என் நா உனக்காக மட்டும் பேச வைத்தாய்
என் பேனா உனக்காக மட்டும் எழுத வைத்தாய்
என் கனவுகள் உன்னில் மட்டும் விரிய வைத்தாய்
மொத்தமாய்,
என்னை உனக்குள் பூட்டி வைத்தாய்
நான் வெளியேற விரும்பா சிறையில் வைத்தாய்...