Wednesday, August 4, 2010

பொன்னாலான கடவுள் சிலை - கடவுளின் பார்வையில் ஒரு குழந்தையின் கையில்

மலர்களின் மணத்திலும்
சுடுகிற தணலிலும்
இயற்கையின் ரிதத்திலும் 
என்னை உணர்கிறான் ஞானி

தன்னுடைய வெற்றியிலும்
ஒவ்வொரு முயற்சியிலும்
அழகிய கோவிலிலும்
என்னை நினைக்கிறான் மனிதன்
 
நான் பெற்ற வேண்டல்களில்
அழகான உன் வேண்டல்
உன் இல்லம் நான் சேர
வழி காட்டி எனை சேர்த்தது

என்றென்று தந்தை
எங்கெங்கு சென்றாலும்
உனக்காக கொண்டுவரும்
அழகான பொம்மைகளுள்
இன்றுந்தன் ஆட்சியின்கீழ்
அடிமை பொம்மையாய் நான்

உன் யானையோடும் புலியோடும்
         பார்பியோடும் சாலியோடும்
         சேர்ந்தென்னைக் குளிப்பாட்டி
         பவுடர் போட்டு
         நகை பூட்டி
உன் நடைவண்டி தேரில்
நீ  நகர்வலம் தள்ளிச்சென்றால்
முறையான நோன்பிருந்து
குடம்குடமாய் நெய்கொணர்ந்து
ஆலயத்தில் செய்யப்பெறும்
அர்ச்சனையும் வீணாகும்
பிரம்மச்சரியம் கடைபிடித்து
ஐம்புலனும் அடக்கிவைத்து
தன்னுடலை திரியாக்கும்
தவங்களும் பயனரும்

உணவு உண்ணும் மேசை மீது
நீ என்னை அமர வைத்து
அதட்டி உருட்டி என்னை
உணவருந்த சொல்லும் போது
குறைகளை கேட்டு கேட்டு
குறைபட்ட எந்தன் நெஞ்சம்
குறைவின்றி நிறைந்து போகும் -உன்
குறைவிலா அன்பில் நெகிழும்

இறைஞ்சவே தெரியாத அதிகார தொனியோடு
விளையாட வாவென்று என்னைநீ அழைத்தாலும்
பொம்மை வீடுகட்டி குடியேற பணித்தாலும்
குட்டிகுட்டி மண்ணுருண்டை உணவாக கொடுத்தாலும்
உன் கையில் பொம்மை வாழ்வே
என் வாழ்வின் உயர்ந்த நிலை

பிறைசூடி நடமாடும் முக்கண் பித்தனாய்
மலைமீது வேலோடு தமிழ்கூறும் ஆண்டியாய்
பருத்த உடலோடு யானை முகத்தனாய்
கோகுலத்தில் குழலோடு கார்மேக வண்ணனாய்
போதி மரத்தடியில் ஏதுமற்ற ஒருவனாய்
கையில் குழந்தையுடன் கனிவான அன்னையாய்
அரச உடையில் குழந்தை இறைவனாய்
வெவ்வேறு வடிவத்தில் வெவ்வேறு தனிமத்தில்
கலையாக வடித்து காசுக்காய் விற்றாலும்
உன்னளவில் உன்கையில் பொம்மையாய் வாழ்வதில்
தயக்கமோ கலக்கமோ ஒதுக்கமோ எனக்கில்லை
இதனை காட்டிலும் இன்பங்கள் வேறில்லை.